2007ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளரின் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (01) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
செங்கலடி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி, வந்தாறுமூலை பகுதியில் பேக்கரி உரிமையாளரான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் அமைந்திருந்த பேக்கரிக்குள் குறித்த நபர் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியான நாகமுத்து பிறேமாவதி என்பவரை கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, நீண்டகாலமாக விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
வழக்கு விசாரணை
வழக்கு விசாரணையின்போது அரச தரப்பு சார்பில் சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்தனர்.

வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, பேக்கரிக்குள் அத்துமீறி நுழைந்த முதலாவது குற்றத்திற்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும், நாகமுத்து பிறேமாவதியை கொலை செய்த இரண்டாவது குற்றத்திற்காக மரண தண்டனையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று விதித்து தீர்ப்பளித்தார்.
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam