நாட்டை உலுக்கிய கவந்திஸ்ஸவின் மரணம்.. ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கை
சியம்பலாங்கமுவ பகுதியில் கவந்திஸ்ஸ என்ற காட்டு யானை உயிரிழந்தமைக்கான அனைத்து பின்னணிச் சூழல்களையும் ஆராய்வதற்கும், காட்டு யானைகளின் நலனுக்கான நிலையான தொழிற்பாட்டு நடைமுறைகளை (SOPs) உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பிற்கான தேசிய வேலைத்திட்டமொன்றை பரிந்துரைப்பதற்குமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சுச் செயலாளர் ஏ. எச். சரத் விஜேசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், பேராசிரியர் டி. சமந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ. ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யூ. கே. கலிங்க பத்மலால், கலாநிதி ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக்க ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. ஹரிசன் இந்த நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படவுள்ளார்.
உயிரிழப்புக்கான காரணங்கள்
'கவந்திஸ்ஸ' யானையின் உயிரிழப்புக்கான உடனடி மற்றும் பின்னணிக் காரணங்கள், மருத்துவ சிகிச்சைகளின் போது ஏதேனும் தவறு அல்லது அலட்சியம் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகளை மேற்கொள்வது இக்குழுவின் முக்கிய பொறுப்பாகும்.

மேலும், காட்டு யானைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையான தொழிற்பாட்டு நடைமுறைகளை தயாரிப்பதும், தேசிய யானைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதும் இக்குழுவின் கடமையாகும்.
இப்பணிகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிபுணர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் இக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 'கவந்திஸ்ஸ' யானையின் மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையும், காட்டு யானைகளின் நலனுக்கான நிலையான தொழிற்பாட்டு நடைமுறைகள் மற்றும் தேசிய யானைகள் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையும் 30 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.