விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசம் நீடிப்பு
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் விவசாய சமூகத்திற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டிக்க விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை தீர்மானித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக தபால் நிலையங்களுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன்படி, டிசம்பர் 2025 மாதத்துடன் தொடர்புடைய ஓய்வூதியங்களைப் பெறுவதற்கான காலத்தை 2026 ஜனவரி 31 வரை மேலும் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம்
இதற்கமைய, டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியத்தை ஜனவரி 31 ஆம் திகதி வரை வேலை நாட்களில் அந்தந்த தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 178,753 என்றும், கடற்றொழில் ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 6,312 என்றும் தெரிவிக்கப்படுகின்றது.