நாட்டில் பல்வேறு பகுதிகளில் சடலம் மீட்பு
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்து வந்த
நிலையில் கடற்தொழிலாளர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்தொழிலாளர் நேற்றுமுன் தினம் (02.01.2023) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (03.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
பின் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த புலத்சிட்டி தொடருந்து மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவலை வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஊடகங்களிடம் இன்று தெரிவித்துள்ளார்.
புனானை தொடருந்து நிலையத்துக்கும் வாழைச்சேனை தொடருந்து நிலையத்துக்கும் இடையில் அமைந்துள்ள ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் நேற்றிரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகம்மதியா வீதி, செம்மண்ஓடை, வாழைச்சேனை எனும் முகவரியில் வசிக்கும் செய்னுலாப்தீன் இக்பால் கலால்தீன் (வயது – 39) என்ற குடும்பஸ்தரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: ராகேஷ்
திருகோணமலை
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தொடருந்தில் பாலையூற்று பகுதியில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (04.01.202) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் யார் என்பதை இனங்காணவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம்
அனுராதபுரம் - கஹடகஸ்திலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெடுனுவெவ பகுதியில் மண்வெட்டி தாக்குதலுக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று(03.01.2023) இடம்பெற்றுள்ளது.
கஹடகஸ்திலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெடுனுவெவ பகுதியை சேர்ந்த ஜமால்தீன் ரஹ்மத்தும்மா (50 வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இரண்டு வயல்காரர்களுக்கும் இடையில் தண்ணீர் திருப்பும் வேளையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் ஆணொருவர் குறித்த பெண்ணை தாக்கியதாகவும் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுள்ளதாகவும் நிலையில் மரணம் தொடர்பில் கஹடகஸ்திலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: பதுர்தீன் சியானா
மன்னார்
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையில் இருந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மீது நேற்று (3.1.2023) யானை தாக்கியமையால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கடற்படை சிப்பாய் பொல் பித்திகம மெலியா பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ்.பி.ரத்நாயக்க (வயது -41) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிலாபத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (3.1.2023) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சிலாபத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.