மட்டக்களப்பில் 100 நாட்கள் செயல் முனைவின் 5ஆம் நாள் ஆரம்பம்(Photo)
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப்பொருளில் இம்மாதம் முதலாம் திகதி வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவால் மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட 100 நாட்கள் செயல் முனைவு செயற்பாட்டின் 5ஆம் நாள் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டம் இன்று காலை மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் நடைபெற்றுள்ளது.
கோரிக்கைகள்
இந்த செயல் முனைவில் கலந்துகொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பி பேரணியாக சென்றதுடன், பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பேரணியின் நிறைவில், அடிப்படை உரிமைகள் குறித்த வீதி நாடகம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது கருத்து சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் பொதுப்பிரகடனமும் வாசிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
அதேநேரம், அரசியல் தீர்வு தொடர்பான கருத்துக்களும் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. அத்துடன், இச்செயல் முனைவின் அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் இதுவரை, கிளிநொச்சி,
முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. நாளை யாழ்.
மாவட்டத்தின் நாவற்குழியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.