யோஷித ராஜபக்ச மீதான வழக்கு - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்திற்கு அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (28) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யோஷித ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இரண்டாவது சந்தேகநபரான டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை
இதன்போது அவரின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மருத்துவ அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை 2026 நவம்பர் 3ஆம் திகதி முன் விசாரணைக்காக அழைக்க உத்தரவிட்டார்.
சட்டவிரோதமான முறையில் பெற்றதாகக் கூறப்படும் சுமார் 57 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை 3 வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.