அரிசி விலையை தீர்மானிக்க அவசரகால சட்டம் எதற்கு! அநுரகுமார சீற்றம்
நுகர்வோரைப் பாதுகாக்கும் என்ற போர்வையில் அவசரகால விதிமுறைகளை அறிவித்து அசாதாரண அதிகாரங்களை ஜனாதிபதி, பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி இன்று தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று இந்த கருத்தை வெளியிட்டார். சீ
னி மற்றும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த அவசரகால கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் அதற்காக சட்டங்களில் ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறினார்.
ஜனாதிபதிக்கான அசாதாரண அதிகாரங்களை வழங்கும் பொது பாதுகாப்பு கட்டளை பிரிவு 2 ன் கீழ் விதிமுறைகளை அறிவிப்பதற்கு பதிலாக பொது பாதுகாப்பு ஆணையின் பிரிவு 17 ஐ ஜனாதிபதி பயன்படுத்தியிருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீனி மற்றும் அரிசி களஞ்சியங்கள் மீதான சோதனைகள் நடத்தப்பட்டன. இவற்றில் எதற்கும் அவசரகால விதிமுறைகளை அறிவிக்க தேவையில்லை, என்று அவர் கூறினார்.
இந்தநிலையில் நாட்டின் சாதாரண சட்டங்களுக்கு அப்பால் செயல்பட ஜனாதிபதியை, முயன்றமை ஒரு ஆபத்தான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார். அவசரகால விதிமுறைகள் மூலம், எவரையும் கைது செய்யலாம் மற்றும் நீதிமன்றத்தில் முன்னிப்படுத்தாமல் தடுத்து வைக்கலாம். சொத்துக்களை கையகப்படுத்த முடியும்.
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த சொத்து அல்லது இருப்பிடத்தையும் ஆய்வு செய்யலாம். பொதுமக்கள் போராட்டங்களை தடுக்க முடியும். இவ்வாறான சட்டம், சீனி மற்றும் அரிசி விலையை கட்டுப்படுத்த தேவையா என்று அவர் கேள்வி எழுப்பினார். பொது மக்களுக்கு சேவை செய்ய ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் தேவை. இதற்காகவே அவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பினார், அது வழங்கப்பட்டது. அவர் 20 வது திருத்தத்தை விரும்பினார், அதுவும் நிறைவேற்றப்பட்டது. இப்போது, அவசரநிலையில் நாட்டை ஆள வேண்டும் என்று அவர் விரும்புகிறார், என்று அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.