இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஆபத்தான நடவடிக்கை - அதிகாரிகளை மிரள வைத்துள்ள செயற்பாடு
இலங்கையில் கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்து, அவற்றை உள்நாட்டில் வளர்க்கும் புதிய ஆபத்தான போக்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கைச் சுங்கம் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டுவருவதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வழிகளுக்குப் பதிலாக புதிய வழிகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளில் முக்கிய தகவல்கள்
இந்த கடத்தல் முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதாக சுங்கத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

சுங்கத் தரவுகளுக்கு அமைய, கடந்த சில மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முக்கிய தகவல்கள் தெரியவந்ததுள்ளது.
அதற்கமைய, தாய்லாந்தில் அல்லது அவுஸ்திரேலியா ஊடாகச் செல்லும் பயணிகளால் இலங்கைக்குப் போதைப்பொருட்கள் இரகசியமாகக் கொண்டுவரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மாதத்தில் மட்டும் அதிகாரிகள் முற்றிலும் வேறுபட்ட வழிகளால் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நான்கு போதைப்பொருள் தொகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு சந்தர்ப்பத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மடகாஸ்கரிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அத்துடன், மற்றைய இரண்டு சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிற்கும், மற்றொரு சந்தர்ப்பம் இத்தாலிக்கும் தொடர்புடையவை என சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.
கூரியர் பொதிகள்
இந்த வழிகள் சுங்கத்தினரால் முன்னர் அடையாளம் காணப்பட்ட முறைகளை விட மிகவும் வேறுபட்டவை என்பதுடன், கடத்தல்காரர்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகப் போக்குவரத்து வழிகளைத் வேண்டுமென்றே மாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபகாலச் சம்பவங்களுடன் தொடர்புடைய வகையில் அதிகாரிகள் சுமார் நான்கு கிலோகிராம் போதைப்பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.
கூரியர் பொதிகள் மூலம் ஹஷிஷ் மற்றும் கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் சம்பவங்கள் வெளிவருவது குறிப்பாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனச் சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையின் காலநிலைக்கேற்ப இந்தத் தாவரங்கள் வளரக்கூடும் என்பதால், அந்த விதைகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லாமல் உள்நாட்டில் பயிரிடும் நோக்கத்திலேயெ கொண்டு வரப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.