பள்ளத்தாக்கில் கவிழ்ந்த கார்! சாரதி தப்பியோட்டம்
தம்புள்ளை அருகே பள்ளத்தாக்கு ஒன்றில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.
குறித்த கார் விபத்து, பொலன்னறுவை பகமூன பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள தம்புள்ள - மஹியங்கன பிரதான சாலையின் 'குமர எல்ல' பகுதியில், அம்பன்கங்கை - குமர எல்ல பாலத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.
வாகன உரிமையாளர் தொடர்பான விபரங்கள்
நேற்று (01.06.2026) காலை , மஹியங்கனவிலிருந்து தம்புள்ள நோக்கிச் சென்று கொண்டிருந்த காரொன்றே, குமர எல்ல பாலத்திற்கு அருகே வீதியிலிருந்து விலகி, அம்பன்கங்கை நோக்கி சுமார் 40 அடி தூரம் சறுக்கிச் சென்று, 20 அடி பள்ளத்தாக்கொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று காலை சுமார் 6 மணியளவில் காரொன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து கிடப்பதாக அப்பகுதிவாசி ஒருவர் பகமூன பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்த போதிலும், காரில் பயணித்தவர்கள் தொடர்பான எதுவித விபரங்களும் இதுவரை வெளியாகவில்லை.
விபத்துக்குள்ளான காரில் சாரதி உட்பட எவரும் இருக்கவுமில்லை. அத்துடன் இன்று (02) காலைவரை குறித்த வாகனத்தின் உரிமையாளர் தொடர்பான விபரங்களும் கண்டறியப்படவில்லை.
சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பகமூன பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.