மியான்மரில் இணைய மோசடி: எச்சரிக்கப்படும் இலங்கையர்கள்
மியான்மரில் உள்ள இணைய மோசடி மையங்களுடன் தொடர்புடைய கட்டாய குற்றச்செயல்கள், அதிகரித்து வரும் போக்கு குறித்து இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனித கடத்தல்காரர்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்று தருவதாக ஏமாற்றி இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை தீவிரமாக குறிவைத்து வருகின்றனர் என்று, தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு இன்று (19.09.2024) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடத்தல்காரர்கள் தாய்லாந்து போன்ற நாடுகளில் அதிக ஊதியம் பெறும் தகவல் தொழில்நுட்ப பதவிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்து செல்வதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அத்துடன், எல்லைகளை தாண்டி வலுக்கட்டாயமாக நகர்த்தப்படுவதற்கு முன்னர், நேர்காணலுக்காக டுபாய் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதன்போது, பலர் மியான்மரில் முடக்கப்பட்டு, அங்கு உடல் ரீதியான இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எனவே, வேலை தேடுபவர்கள் வருகை விசாவில் பயணம் செய்ய வேண்டிய வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், விழிப்புடன் செயற்படுமாறும், இலங்கையின் தேசிய மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |