யாழில் வெள்ள அனர்த்தத்துக்குப் பின்னரான தற்போதைய நிலைமை
வெள்ள அனர்த்தத்துக்குப் பின்னரான தற்போதைய நிலைமைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட அரச அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 2. 30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த அரச அதிபர், வெள்ள அனர்த்தத்தின் போது சிறப்பாகக் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.
உரிய நடவடிக்கைகள்
அத்துடன், தாம் பல பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டதாகவும், உடனடியாகத் தீர்க்க வேண்டிய விடயங்களுக்கு நடவடிக்கை எடுத்ததாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் பார்வையிட்டதுடன் சில கிராமங்களில் வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான பொறிமுறையை உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாத வகையில் பல நிரந்தர திட்டங்களைச் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயற்படுவோம் எனவும் அரச அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை, வெள்ள அனர்த்தத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும், பிரதேச செயலாளர்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.