பிரித்தானியாவில் வரலாறு காணாத பணிப்புறக்கணிப்பு: ரிஷி சுனக் வெளியிட்டுள்ள தகவல்
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் தேசிய சுகாதார சேவை தாதியர்கள் இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பை இன்று ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியாவின் வரலாற்றில் மிகப் பெரிய பணிப்புறக்கணிப்பு என கூறப்பட்டுள்ளது.
தாதிய தொழிற்சங்கத்தின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாதியர்களின் கோரிக்கைகள்
இதற்கமைய தாதியர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பானது, இரவு எட்டு மணி வரை தொடர்ந்துள்ளதுடன், மீண்டும் எதிர்வரும் 20 ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும் தாதிய தொழிற்சங்கத்தின் சம்பள உயர்வு கோரிக்கையானது அளவுக்கு அதிகமானது எனவும் சுயாதீன பரிந்துரைகளின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் கூறியுள்ளது.
தாதியர் தொழிற்சங்கத்தின் சம்பள உயர்வு கோரிக்கையானது யாதார்த்தமற்ற ஒன்றென சுகாதார அமைச்சர் மரியா கோஃபீல்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சுகாதார அமைச்சர் நேர்மையற்ற ஒருவராக இருப்பதாக தாதியர் தொழிற்சங்க தலைவர் பட் கலென் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நோயாளர்கள் பாதிப்பு
இந்த நிலையில்,பிரித்தானியாவில் தாதியர்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக வழமையான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், உயிர்காக்கும் மற்றும் அவசரமான சிகிச்சைகளுக்கான சேவைகளை தாதியர்கள் வழங்கி வருகின்றனர்.
புற்றுநோய்க்கான சிகிச்சை, சிறுநீரக தூய்மிப்பு சிகிச்சை, தீவிர மற்றும் முக்கிய சிகிச்சைகள், சிறுவர் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேற்று பிரிவு ஆகியன வழமைபோன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.