கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாணய மாற்று கவுண்டர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் அந்நியச் செலாவணித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வருகை முனையத்தில் புதிய நாணய மாற்று கவுண்டர்களை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விமான நிலையத்தின் சுங்கப் பகுதியில் நாணய மாற்று கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. விமான நிலைய மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக, அங்கு இயங்கும் நாணய மாற்று கவுண்டர்களை இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
எனினும், புதிய இடங்களுக்கான மாதாந்த வாடகை கட்டணங்களில் உடன்பாடு ஏற்படாததால், பழைய ஒப்பந்தங்களை இடைநிறுத்த விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
நாணய மாற்று கவுண்டர்கள்
இதனைத் தொடர்ந்து, இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி ஏலத்தின் அடிப்படையில், மூன்று ஆண்டுகளுக்கு நாணய மாற்று கவுண்டர்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, வரையறுக்கப்பட்ட போட்டி ஏல முறையின் கீழ் வருகை முனையத்தில் புதிதாக ஒதுக்கப்பட்ட பகுதியில் 03 ஆண்டுகளுக்கு ஒப்பந்த காலத்திற்கு அந்நிய செலாவணி கவுண்டர்களை நிறுவுவதற்காக இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
அதற்கமைய, பெறப்பட்ட 05 கேள்விப் பத்திரங்கள் தொடர்பாக உயர்மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 03 வருட காலத்திற்கு அந்நிய செலாவணி கவுண்டர்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்களை வழங்க துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.