மதுபோதையில் பேருந்தை செலுத்திச்சென்ற இ.போ.ச சாரதி கைது
மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றத்திற்காக சாரதி ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் - ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று (04.01.2025) மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் அதிகளவான பயணிகளுடன் செல்வதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் அணியினர், பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதிருந்துள்ளதுடன், அவர் போதையில் இருந்தமையையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து மது போதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பொலிஸாரின் விசாரணைகளின் பின் குறித்த சாரதி, ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.