சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிடும் என தகவல்
சுத்திகரிப்பதற்கு கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மூட நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுத்திகரிப்பு ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்திலேயே இலங்கை வரவுள்ளது.
அதுவரை சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிட்டுள்ளது. டிசம்பர் மாதம் இலங்கை வரும் கப்பலில் 90 ஆயிரம் மெற்றிதொன் கச்சா எண்ணெய்யே கொண்டு வரப்படுகிறது எனவும் அது 15 நாட்களுக்கே போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
டிசம்பர் மூன்றாவது வாரத்தின் பின்னர் கச்சா எண்ணெய்யை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடு பகுதியில் இலங்கை வரவுள்ளதுடன் அதுவரை மீண்டும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிடும் என கூறப்படுகிறது.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாததன் காரணமாக மூடப்படுவது இதுவே வரலாற்றில் முதன் முறை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila), இலங்கையில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தான் அக்டோபர் மாதத்திலேயே கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதியளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்பதை இன்றைய தினம் கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் கச்சா எண்ணெய் இல்லாத காரணத்தினால், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், சந்தைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் தொகை கிடைத்து வருவதால், எரிபொருள் தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் எனவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
