நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும்..! கம்மன்பில எச்சரிக்கை
தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் திறைசேரியின் கையிருப்பைக் கருத்திற்கொள்ளும்போது, 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் சாத்தியம் காணப்படுகின்றது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(14.11.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2028ல் மீண்டும் வங்குரோத்து நிலை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள பின்னணியிலும் நாட்டுக்குப் பாரிய வெளிநாட்டு முதலீடுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
தேசிய மட்டத்தில் பாரிய (மெகா) அபிவிருத்தித் திட்டங்கள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை. அரசமுறைக் கடன்களை 2028ஆம் ஆண்டு செலுத்த ஆரம்பிக்காவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையடையும் என்று சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால் அவ்வாறான நிலைமை ஏற்படாது என்றும், 2027ஆம் ஆண்டு முதல் அரசமுறைக் கடன்களைத் திருப்பிச் செலுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும், தற்போதைய நெருக்கடிகள் மற்றும் திறைசேரியின் கையிருப்பைக் கொண்டு ஆராய்கையில் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நாடு வங்குரோத்து நிலையடையும் சாத்தியமே காணப்படுகின்றது.
சாத்தியமற்ற வாக்குறுதிகள்
நிதி அமைச்சரான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பொருளாதார ரீதியில் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நடுத்தர மக்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவுகள் நாளுக்கு நாள் உயர்வடைந்துள்ள பின்னணியில் மக்களுக்கு நேரடியாகத் தற்காலிக நிவாரணம் வழங்கும் முன்மொழிவுகள் எவையும் முன்வைக்கப்படவில்லை.
2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமேனும் நிறைவேற்றப்படாத நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் போலியான வாக்குறுதிகளும் நடைமுறைக்குச் சாத்தியமற்ற திட்டங்களுமே தொகைக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை நடைமுறையில் ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.