கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதி மக்களுக்கு நெருக்கடி: சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக நாட்டில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடுள்ளது. இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், எரிவாயு விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலை உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மின் அடுப்பு மற்றும் மண்ணெண்ணை அடுப்பு என்பவற்றுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமும் நேற்று முதல் 50 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும், எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் காணமுடிகின்றது.
மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை என தெரிவித்து, எரிவாயு ஏற்றிச் சென்ற லொறியின் முன் தரையில் அமர்ந்து பெண் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவமும் வாத்துவ, பொதுப்பிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் தான் கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் ரைஸ் குக்கர் மூலம் அனைத்து சமையல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சோறு சமைப்பது, கறி சமைப்பது, பால் காய்ச்சுவது என அனைத்து செயற்பாடுகளும் ரைஸ் குக்கர் மூலம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.





