யுத்த வீரர் என்ற பெயரில் குற்றவாளிகள் தப்ப முடியாது! கர்தினால் சுட்டிக்காட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்துவது மக்களின் அடிப்படை உரிமை. யுத்த வீரர் என்ற லேபிளுக்குப் பின்னால் மறைந்து கொண்டு எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கக் கூடாது என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று(21) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பான முக்கிய ஆவணங்கள்
இன்று காலை 8:45 மணியளவில் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து விசேட அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கர்தினால் ஆண்டகையுடன் இணைந்து கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலரும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகச் சில நபர்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் பிரிவினர் முயன்றதாகக் குற்றம் சாட்டிய அவர், அரச புலனாய்வுச் சேவையின் நடவடிக்கைகள் மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரின் செயற்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகங்களையும் வெளியிட்டார்.
தாக்குதல் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்ட கர்தினால், முந்தைய ஆணைக்குழு அறிக்கைகளின் உண்மைத்தன்மை மீள ஆராயப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சாதகமான விசாரணை
கடந்த கால அரசுகள் தமக்குச் சாதகமான விசாரணைகளையே முன்னெடுத்த போதிலும், தற்போதைய அரசு இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உண்மை மறைக்கப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனத் தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஆண்டகை, சட்டமும் நீதியும் அனைவருக்கும் சமமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்றும் தனது உரையில் மேலும் கூறினார்.
நினைவேந்தலை முன்னிட்டு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தைச் சூழ இன்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam