கோவிட் தொற்று - உண்மையான புள்ளிவிபரங்களை மறைக்கும் அரசாங்கம்
சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தேசிய மட்டத்தில் வெளியிடும் கோவிட் புள்ளி விபரங்களுக்கும் கீழ் மட்டத்தில் காணப்படும் உண்மையான நிலைமைக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருப்பதாக கடந்த காலம் முழுவதும் சுகாதார தொழிற்சங்கங்கள் உட்பட பல தரப்பினர் சுட்டிக்காட்டி வந்தனர்.
இந்த நிலையில், சுகாதார அமைச்சு புள்ளவிபரங்களை மறைக்கின்றது என்ற குற்றச்சாட்டு தற்போது சாட்சியங்களுடன் ஒப்புவிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் எவ்வித கண்காணிப்பும் இன்றி வீடுகளில் இருப்பதாக கம்பஹா மாவட்ட கோவிட் தடுப்பு குழு நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தது.
நேற்று முன்தினம் அந்த குழுக் கூடிய போது கடந்த முதலாம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையான ஒன்பது நாட்களில் கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 555 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இந்த காலப் பகுதியில் 3 ஆயித்து 629 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைத்து காட்டியே தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது.
8 ஆயிரத்து 926 க்கும் அதிகமான நோயாளிகளை குறைத்து காண்பித்துள்ளது. அதேபோல் வீடுகளில் ஆயிரத்து 506 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு கூறியிருந்தது.
இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 8 ஆயிரத்து 900 க்கும் மேற்பட்ட நோயாளிகளை அரச புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படாதது பாரதூரமான நிலைமை.
அதேவேளை இதற்கு இணையான நிலைமை கிழக்கு மாகாணத்தில் காணப்படுவதுடன் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள தகவலுக்கு அமைய உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேல் மாகாணத்தில் 837 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 194 கோவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 342 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாள் கூறினாலும் அரசாங்க புள்ளிவிபரத்தில் 45 பேர் என கூறப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 163 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் 71 பேர் மாத்திரமே என அறிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 332 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ள நிலையில், அரசாங்க புள்ளிவிபரத்தில் 78 எனக் கூறப்பட்டுள்ளது.
தொற்றுநோய் ஒன்றை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக நோய் பரவல் தொடர்பான சரியான தகவல்கள் அத்தியவசியம்.
அத்துடன் நோய் பரவல் மற்றும் அதன் தன்மையை மக்களுக்கு அறிவித்து அவர்களுக்கு தெளிவுப்படுத்தி தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை பெற வேண்டியது அவசியம். ஆனால் புள்ளிவிபரங்களை மறைத்து, திரிபுப்படுத்துவதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியாது.
அரசாங்கம் யாரை ஏமாற்றப் பார்க்கின்றது என்பது இங்குள்ள பிரச்சினை என அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.