மட்டக்களப்பில் 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கோவிட் பரிசோதனை முன்னெடுப்பு
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் எவருக்கும் கோவிட் வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடந்த தினங்களில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், குறித்த உத்தியோகத்தருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ரபிட் அன்டிஜன் சோதனை மூலமான பரிசோதனைகளும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 11 நபர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார பரிசோதகர்களினால் ரபிட் அன்டிஜன் சோதனை மூலம் 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிடைக்கப்பெற்ற அறிக்கைக்கு அமைய எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் கோவிட் வைரஸ் தொற்று இல்லை என மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 11 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான அறிக்கைகள் கிடைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.





