மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை - வைத்திய நிபுணர் எச்சரிக்கை
நாட்டில் தற்போதும் அடையாளம் காணப்படும் வைரஸ் தொற்றாளர்கள் டெல்டா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதால் மீண்டும் வேகமாக டெல்டா வைரஸ் பரவக்கூடிய அச்சுறுத்தல் நிலை இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும், வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதைய கோவிட் வைரஸ் தொற்று பரவல் நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா வைரஸ் நாட்டில் வேகமாக பரவிக் கொண்டுள்ளது, இறுதியாக நாம் முன்வைத்த ஆய்வறிக்கையில் கூட தொற்றாளர்களில் 95.8 வீதமானோர் புதிய டெல்டா வைரஸ் தொற்று தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியிருந்தோம்.
ஏப்ரல் மாதமளவில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்ட பின்னர் அன்று தொடக்கம் நாளாந்தம் டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் நாடு மீண்டும் நீண்ட முடக்கத்திற்கு சென்றுள்ள நிலையில் நிலைமைகளை கட்டுப்படுத்த இது சாதகாமகவே உள்ளது. அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் குறித்த ஒரு மாதகாலத்தில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது என்பதற்காகவோ அல்லது கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் குறைவை காட்டுகின்றது என்பதற்காகவோ நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளதென கருதுவது தவறானதாகும்.
இன்னமும் நாட்டில் டெல்டா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையே காணப்படுகின்றது. அதேபோல் டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கும் வரையில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையே இருக்கும்.
டெல்டா வைரஸ் வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ள காரணத்தினால் நாம் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக விடுபடுவது சவாலான விடயமே.
எனவே மக்கள் இப்போது மட்டுமல்ல தொடர்ச்சியாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தமது மற்றும் அயலவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.