சுவிசில் கோவிட் நிலை: எடுக்கப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கை
சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி
12 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுறவத்திங்கள் (தை) 2022 முதல் இந்நடவடிக்கை நடைமுறைக்கு வரும் எனவும் நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் அலான் பெர்சே தெரிவித்துள்ளார்.
முடக்கம் அல்லது கடுமையான நடவடிக்கை
கோவிட் தொற்றுத் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களும், நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் மட்டும் பொது இடங்களில் உரிய சான்றுகளுடன் உள்நுழையலாம், அவர்கள் முகவுறை அணிந்திருக்க வேண்டும் எனும் கடும் விதி சுவிற்சர்லாந்து நடுவனரசினால் அறிவிக்கப்படலாம்.
முகவுறை அணியமுடியாத இடங்களில் கதவுகளை அடைத்துக்கொள்ள வேண்டி வரலாம் - அதாவது அந்நிலையம் மூடப்படலாம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று முழுமையான முடிவு சுவிஸ் அரசால் வெளியிடப்படவுள்ளது.
தொற்றின் தீவிரம் - நடப்புநிலை
இதுவரை 12 693 079 மகுடநுண்ணி (கோவிட் -19) தடுப்பூசிகள், உந்துநிரப்பி (பூஸ்ரர்) உட்பட சுவிற்சர்லாந்தில் இடப்பட்டுள்ளது.
தற்போதைய கணக்குப்படி நாள் ஒன்றிற்கு 63 268 தடுப்பூசிகள் இடப்பட்டு வரப்படுகின்றது. இது கடந்த கிழமையைவிடவும் 23 வீதம் கூடுதலாகும்.
சுவிசில் தற்போது 66.4வீதமானவர்கள் தடுப்பூசியினை முழுமையாக இட்டுக்கொண்டுள்ளார்கள். 13 வீதமானவர்கள் மூன்றாவது உந்துநிரப்பி (பூஸ்ரர்) ஊசியையும் இட்டுவிட்டார்கள்.
கடந்த கிழமை இறுதி நாட்களில் 23 511 புதிய தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
7 நாள் சராசரிக் கணக்கினை உற்று நோக்கின் 2 விகிதம் தொற்று தீவிரமடைந்துள்ளது.
1708 புதிய நோயாளர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து பண்டுகம் (வைத்தியம்) பெற்றுக்கொள்ள வேண்டி இருந்துள்ளது. இதன்படி மருத்துவமனையில் தங்கும் நோயாளர் தொகை 14 வீதம் கூடியுள்ளது.
கடந்த கிழமைக்குள் 46 நோயாளர்கள் மகுடநுண்ணித் தொற்றின் தாக்கத்தால் இறந்துள்ளார்கள்.
சுவிற்சர்லாந்து நடுவனரசு கூடிக்கொண்டு செல்லும் மகுடநுண்ணிப் பெருந்தொற்று தீவிரத்தினை கட்டுப்படுத்த மாநிலங்களையும், துறைசார் மதியுரைஞர்களையும் கலந்தறிந்து அறிவுரை வழங்க வேண்டுகை விடுத்திருந்தது.
14.12.21 வரை மாநிலங்கள் அரசுகளின் அறிவுரைகள் நடுவனரசால் வரவேற்கப்பட்டிருந்தது. இதுவரை எந்த மாநிலமும் புதிய அறிவுரையினை வழங்கவில்லை.
ஆனால் நடுவனரசு எடுக்கும் முடிவிற்கு அனைத்து மாநிலங்களும் கட்டுப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 26 மாநிலங்களும் தற்போதைய சூழலை மிகவும் உய்ய நெருக்கடி நிலையாகவே நோக்குகின்றன.
இதன் பொருள் உணவகங்களிலும், பொது இடங்களிலும், விளையாட்டுப் பொழுதுபோக்கு நிலையங்களில் தடுப்பூசிச்சான்று அல்லது நோயிலிருந்து குணமடைந்த சான்று தேவைப்படும். எங்கும் முகவுறை அணிந்திருக்க வேண்டியிருக்கும்.
முழு முடக்கம் வருமா?
சுவிற்சர்லாந்தின் ஆட்சிமன்றக்குழு முழுமையான முடக்கத்தினை விரும்பவில்லை.
சுவிற்சர்லாந்துப் பாராளுமன்றத்தில் உள்ள சமூகப் பாதுகாப்பு, நலவாழ்வு ஆட்சிமன்றக் குழு உணவகங்கள், மது, நடனவிடுதிகள் அல்லது நீச்சல் தடாகங்கள் முழுமையாக மூடப்படுவதை விரும்பவில்லை.
நடுவனரசு பாடசாலைகளிலும் பொதுப்போக்குவரத்திலும் தொற்றினை குறைக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க இக் குழு மதியுரையினை முன்மொழிந்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் முடிந்த முடிவு வெள்ளிக்கிழமை 17. 12. 21 வெளியிடப்படும், அதுவரை பொறுத்திருப்போம்!
தொகுப்பு: சிவமகிழி