பிரித்தானியாவில் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்று! - ஒரே நாளில் 138 பேர் பலி
பிரித்தானியாவில் மார்ச் மாதத்திற்கு பின்னர் அதிகளவான நாளாந்த கோவிட் மரணங்கள் இன்றைய தினம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் 138 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் டொல்டா மாறுபாடு குறித்த அச்சம் தலைதூக்கியுள்ள நிலையில், கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஏழு நாட்களில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 13 வீத உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், புதிய கோவிட் வழக்குகள் தொடர்ச்சியாக ஆறாவது நாளாகக் குறைந்துள்ளன, கடந்த 24 மணிநேர காலத்தில் 21,691 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஏழு நாட்களில் 20.5 வீத குறைவைக் குறிக்கிறது, அதே நேரத்தில் வைரஸுடன் தொற்றுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் 0.4 வீதம் குறைந்துள்ளது.
இங்கிலாந்தின் வயது வந்தோரின் மொத்த மக்கள் தொகையில் 73 வீதமானோர் கோவிட் தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சுமார் 89 வீதமானோர் முதல் அளவை பெற்றுக்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ஸ்காட்லாந்தில் மீதமுள்ள கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்த பிறகு சமீபத்திய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, எஞ்சியிருந்த கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இங்கிலாந்தில் 3 வீதமான இடங்களில் கோவிட் வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
கிழக்கு மிட்லாண்ட்ஸில் உள்ள லிங்கன் அதிக நோய்த்தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது, கடந்த வாரத்தில் 649 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மிடில்ஸ்பரோ இரண்டாவது இடத்தில் உள்ளது, ஆனால் அதன் விகிதம் ஏழு நாட்களில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.