சிறுபான்மை மதங்களுக்கு எதிரான சுகாதார விதிமுறை - இலங்கை எங்கிலிக்கன் தேவாலயம் விமா்சனம்
இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்ட கோவிட் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விதிமுறைகள், பகுத்தறிவு அடிப்படை இல்லாதது, குறிப்பாக சிறுபான்மை மதங்களுக்கு எதிராக தன்னிச்சையானது, சமமற்றது மற்றும் பாரபட்சமானது என்று விமா்சனம் வெளியிடப்பட்டுள்ளது
இந்த விதிமுறைகளில் உள்ள முரண்பாடுகள் குறித்து இலங்கையில் உள்ள எங்கிலிகன் தேவாலயம்( The Anglican Church in Sri Lanka) தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பாடசாலைகள், பொழுதுப்போக்கு மையங்கள், ஜிம் பயிற்சி மையங்கள், உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைத் திறக்க விதிமுறைகள் அனுமதிக்கின்றன.
எனினும் தேவாலயங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதில் தடை உள்ளது என்று தேவாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தமது பார்வையில் இது ”பகுத்தறிவு அடிப்படை இல்லாதது, குறிப்பாக சிறுபான்மை மதங்களுக்கு எதிராக தன்னிச்சையானது, சமமற்றது மற்றும் பாரபட்சமானது" என்று எங்கிலிக்கன் தேவாலயம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் வகுப்பறைகளில் ஒன்றுக்கூடும்போது, விளையாட்டு மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சிறிய இடங்களில் கூடி உபகரணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, குளிரூட்டப்பட்ட இடங்களில் மக்கள் உடற்பயிற்சி செய்யும்போது, மூடப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்ட அரங்கங்களில் திரைப்படங்கள் மற்றும் பிற வகையான பொழுதுபோக்குகளைப் பார்க்கும்போது, ஏன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளின் தேவைகளுக்கு உட்பட்டு, ஒரு தேவாலயத்திலோ அல்லது அதுபோன்ற கட்டிடத்திலோ ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் மக்கள் ஒன்றுகூடமுடியாது என்று தேவாலயம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல கடிதங்கள் அனுப்பியும் எந்த பதிலும் வராததால், அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டதாக தேவாலயம் குறிப்பிட்டுள்ளது.
தொற்றுநோயை சமாளிக்க பொது சுகாதார நலன்களுக்காக சில நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் தேவை.
எனினும் அத்தகைய கட்டுப்பாடுகள், தன்னிச்சையாகவும் பாரபட்சமாகவும் இருக்க முடியாது.
மாறாக அவை நியாயமானதாகவும் பொது சுகாதார பகுத்தறிவு கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று தேவாலயம் தொிவித்துள்ளது.
எனவே சமூக துாரம், ஆட்களின் எண்ணிக்கை அடிப்படையிலான பொதுவான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மத வழிபாட்டை அனுமதிக்கவேண்டும் என்று தங்கள் சுகாதார எங்கிலிகன் தேவாலயம் அரசாங்கத்திடம் அழைப்பு விடுத்துள்ளது.
