கோவிட் காலத்தில் - ஆதிவாசிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக தெரிவிப்பு
மஹியங்கனை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் அடிப்படை உணவு வசதிகளின்றி சிரமத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆதிவாசிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆதிவாசிகளின் தலைவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹியங்கனை பகுதியில் 400 குடும்பங்களை சேர்ந்த 2500 ஆதிவாசி அங்கத்தவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில், இங்கு வாழும் மக்கள் நாட்டில் தற்போது ஏற்பட்ட கோவிட் தொற்று நோயின் தாக்கம் தமக்கு இல்லை எனவும் கூறினார்.
ஆனால் ஆதிவாசிகள் வாழும் குறித்த பகுதிக்கு, கோவிட் தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருவதில்லை எனவும், சுற்றுலா பயணிகள் வருவதனால் தமக்கு அதிக உதவிகள் கிடைத்ததாகவும் அதனை வைத்தே தாம் அன்றாட வாழ்வை மேம்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
தற்போது சுற்றுலா பயணிகள் வராத காரணத்தினால் தமக்கு உதவிகள் ஒன்றும் கிடைப்பதில்லை எனவும் இதனால் தற்போது வாழ்வாதாரத்தில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் கொடுப்பனவு கூட தமக்கு கிடைக்கவில்லை என்றும் ஆதிவாசிகள் தொடர்பில் ஆதிவாசிகளின் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.



