மகிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 14 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தரவை இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுகா பெரேரா, சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோருக்கும் இவ்வாறு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (9) கோட்டகோகம மற்றும் மைனாகோகம அமைதிப் போராட்டத்தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இந்த வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த 17 பேரும் இலங்கையில் பிரசன்னமாக இருக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய நீதிமன்றம் இந்த பயண தடையை விதித்துள்ளதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, சட்டத்தரணிகள் சிலர் நேற்று முன்தினம் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.