வர்த்தக அமைச்சரை சந்தேகநபராக பெயரிடும் உத்தரவை வழங்கவுள்ள நீதிமன்றம்
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவை மோசடி வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட வேண்டுமா என்பது குறித்து கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சதுரிகா டி சில்வா, 2025 ஜூன் 16 ஆம் திகதி தனது உத்தரவை வழங்கவுள்ளார்.
தேசிய தொழிலாளர் நிறுவனம் என்று அழைக்கப்படும் அறக்கட்டளைக்குச் சொந்தமான கட்டிடம், தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் அதிகாரிகள் என்று காட்டிக் கொண்ட சிலரால் 3.6 மில்லியனுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் சமரசிங்கவின் பெயரும் உள்ளடங்கியுள்ளது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக முன்னிலையான சட்டத்தரணி மைத்ரி குணரத்னவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
[MASVPTT ]
மோசடி
வழக்கை விசாரித்த கொழும்பு மோசடி பணியகம் சமர்ப்பித்த ஆரம்ப அறிக்கைகளைப் பார்த்தபோது, அமைச்சர் மற்றும் அவரது நண்பர்களின் தொடர்பு, இந்த மோசடியில் தெளிவாகத் தெரிவதாக சட்டத்தரணி குணரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமரசிங்க குறித்த தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகக் காட்டிக் கொண்டாலும், கேள்விக்குரிய சொத்து அதற்குச் சொந்தமானது அல்ல என்று குணரத்ன கூறியுள்ளார்.
அத்துடன், சமரசிங்கவும் அவரது நண்பர்களும், தேசிய தொழிலாளர் நிறுவன அதிகாரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், அங்கு எந்தப் பதவிகளையும் வகிக்கவில்லை என்றும், அவர்கள் வெளியாட்கள் என்றும் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு அவர் நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |