தனுஷ்க குணதிலக்கவுக்கு இன்றும் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனுஷ்க குணதிலக்க இன்று கை விலங்குடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள மையத்தில் இருந்து வீடியோ தொழிற்நுட்பம் ஊடாக சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள்
பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்னி நகரிலுள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க
இலங்கை அணியின் கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சிட்னி நகர பெடரல் நீதிமன்றம் நேற்று குணதிலக்கவுக்கு பிணை வழங்க மறுத்துள்ளதுடன் இன்றைய தினம் அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வீடியோ தொழிற்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது.