கிளிநொச்சியில் மதுபான சாலை ஒன்றிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Video)
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில் விநாயகர் ஆலயம், பாடசாலை, ஆசிரியர் விடுதி, மற்றும் பொது விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் மையப் பகுதியில் மதுபான சாலை அமைப்பதற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுத் தொல்லை ஏற்படுத்துவதாக தெரிவித்து பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்றைய (06-07-2023) தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொது இடங்களுக்கு பாதிப்பு
அமைப்புகள் மற்றும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி எஸ். விஜய ராணி உள்ளிட்டோர் முன்னிலையாகி இருந்தனர்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலை மற்றும் அருகில் இருக்கின்ற மிகப் பழமையான ஆலயம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இது அமைந்திருப்பதனால் இதற்கான தடை உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு விண்ணப்பம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி விடயங்களை கருத்தில் எடுத்த மன்று இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதுடன் எதிர்வரும் (20.07.2023)ஆம் திகதி வரை மறுதவணை இடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
