திருகோணமலையில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் (03.09.2023) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தை நடாத்தயிருந்த நிலையில் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.
குறித்த தடை உத்தரவினை இன்று (02.09.2023) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணத்துரை தர்ஷினி வழங்கியுள்ளார்.
இன முறுகல்
திருகோணமலை பெரியகுளம் சந்தியில் நாளைய தினம் (03) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது இன முறுகலை ஏற்படுத்தும் என்றதன் அடிப்படையில் நிலாவெளி பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய நபர்களான ஆர்.ஜெரோம், ரமேஷ் நிக்கலஸ் ஆகியோர்கள் உட்பட ஏழு பேருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உட்பட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் ஏழு பேருக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |