முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வினை மேற்கொள்ள நீதிமன்றத்தால் தடை உத்தரவு
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் மே 18 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த நினைவேந்தலில் ஈடுபடும் ஐந்து பேருக்கு எதிராக பொலிஸார் தடையுத்தரவினை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைந்த பகுதிக்கு ஏற்பாட்டுக்குழுவினர் நினைவுக்கல் கொண்டு சென்றவேளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தடுத்துள்ளதுடன், குறித்த நினைவுகல் இரவோடு இரவாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதுடன், நினைவுத்தூபியும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகள் பலர் தமது கண்டனங்களை வெளிட்டுள்ளனர்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவு நிகழ்வினை மேற்கொள்வதற்கோ அல்லது மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை இன்றைய தினம் பெற்றுள்ளனர்.
கோவிட் நிலமையினை கருத்திற்கொண்டு 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் எந்த நிகழ்வும் நடத்தகூடாது .மக்கள் கூடக்கூடாது, பொது இடத்தில் வைத்து நினைவுகூர கூடாது என்றும் முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினை சேர்ந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி, தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் பீற்றர் இளஞ்செழியன்,தவிசாளர் க.விஜிந்தன், அருட்தந்தை வசந்தன் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
இதன்படி,AR 418 / 21 வழக்கு இலக்கத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம்
தடை உத்தரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
