நடிகை ஜாக்குலின் துபாய் செல்வதற்கு அனுமதி வழங்கிய டில்லி நீதிமன்றம்
200 கோடி இந்திய ரூபா பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜனவரி 27 முதல் 30 வரை துபாய்க்கு மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று (28.01.2023) பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதன்போது ஜாக்குலின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, துபாயில் நடைபெறும் பெப்சிகோ மாநாட்டில் கலந்து கொள்ள நடிகை ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருப்பதாகவும், அவர் அதைத் தவிர்த்தால் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
பணமோசடி வழக்கில் ஜாக்குலின்
அவர் அண்மையில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவரது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இதனையடுத்தே தொழில்ரீதியிலான கடமைகளுக்காக நடிகை ஜாக்குலினை வெளிநாடு செல்ல நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 2022 நவம்பர் அன்று பணமோசடி வழக்கில் ஜாக்குலினுக்கு வழக்கமான பிணை வழங்கப்பட்டது.
எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை.
தொழிலதிபர் சுகேஷ் சந்திரசேகர் மீதான 200 கோடி முறைகேடு விவகாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜாக்குலின் மனுத் தாக்கல்
இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கில் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி ஜாக்குலின் பெர்னாண்டோவுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.
இதற்கிடையே வெளிநாடு செல்ல அனுமதிகோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.