நாடு கடத்தப்படும் குடியேறிகளுக்கு காத்திருக்கும் கடும் எச்சரிக்கை
அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் எல்- சால்வடோரின் அறிவிப்பு பின்னணியில் பல சிக்கல்கள் இருப்பதாக சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆபத்தான கைதி
இது தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கேலை (Nayib bukele) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆபத்தான கைதிகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நயீப் புக்கேல் உறுதி அளித்துள்ளார்.
அவர்களை தங்கள் நாட்டு சிறையில் அடைத்து வைக்கும் திட்டத்தை புக்கேல் முன்வைத்துள்ளார் .
அவ்வாறு எல் சால்வடோருக்கு நாடு கடத்தப்படுபவர்கள் CECOT எனப்படும் மிகப்பெரிய அதி பாதுகாப்பு வாய்ந்த சிறையில் அடைக்கும் திட்டத்தை புக்கேல் டிரம்பிடம் முன்மொழித்துள்ளார் என்று தெரியவருகிறது.
ஜன்னல்கள் இல்லாத அறை
இங்கு கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர். மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர் எனவும் கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட டொனால்டு ட்ரம்ப், "அதைச் செய்ய எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருந்தால், நான் அதை மனப்பூர்வமாக செய்வேன்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |