நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது – சாகர
நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து செல்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியசம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கான ஒரே காரணம் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை அரசாங்கம் மக்கள் மீது திணிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையானது நாடு என்ற ரீதியில் ஆபத்தானது எனவும் அந்நிய செலாவணி கையிருப்பினை அதிகரித்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ம் ஆண்டில் அநுரகுமார திஸாநாயக்க இந்த நாட்டை பொறுப்பேற்றுக் கொண்டதன் போதான அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கத்திடம் பொருளாதாரம் தொடர்பில் இருக்கக் கூடிய தீா்வுகளாக வரி விதிப்பு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தினை குறிப்பிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வரி விதிப்பினால் சிறிய மற்றும் மத்திய தர முயற்சியான்மையாளர்களே அதிகம் பாதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.