சஷீ வீரவங்சவின் வழக்கில் இருந்து விலகிய சட்டத்தரணி
விமல் வீரவங்சவின் மனைவி சஷீ வீரவங்சவுக்கு எதிரான வழக்கில் இருந்து பிரதிவாதியின் சட்டத்தரணி விலகிக் கொண்டுள்ளதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போலியான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு நேற்று (07.07.2023) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சுகயீனமுற்றிருப்பதால், நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த கனிஷ்ட சட்டத்தரணி, விசாரணைகளை ஒத்திவைக்குமாறு கோரினார். எனினும், விசாரணையை ஒத்திவைக்க முடியாது என பிரதம நீதவான் ஆட்சேபம் தெரிவித்தார்.
நீதிமன்றம் உத்தரவு
எனினும் இந்த விசாரணைக்கு முன்னிலையாகுமாறு சிரேஷ்ட சட்டத்தரணி தனக்கு ஆலோசனை வழங்காததால் வழக்கிலிருந்து விலகுவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதன்படி, சட்டத்தரணியின் ஒத்துழைப்புடனோ அல்லது இல்லாமலோ அடுத்த தவணையில் விசாரணைக்கு தயாராக வருமாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏப்ரல் 31, 2022 அன்று, இதே குற்றச்சாட்டிற்காக மற்றொரு வழக்கில் சஷீ வீரவங்சவுக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் போது, சஷி வீரவங்சவை 50,000 ரூபா மற்றும் 2000 ரூபா ஆகிய இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |