இலங்கையில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் ஆபத்து
சமகால அநுர அரசாங்கத்தினால் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ள குற்றங்களை தடுக்கும் சட்டத்தின் கீழ், நீண்ட முடி அல்லது உடலில் பச்சை குத்தல்கள் காரணமாக கூட நபர்களை கைது செய்து விளக்கமறியலில் வைக்க முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு ஜனாதிபதி சட்டத்தரணி இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது பதிவில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சீர்திருத்துவது அல்லது இரத்து செய்வதற்கான கோரிக்கைகளுக்கு பதிலாக அரசாங்கத்தினால் புதிய சட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டமூலம்
பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் என புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கு அத்தியாவசியம் எனக் கருதப்படும் GSP+ சலுகையை தொடர்ந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
அதற்காக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை சீர்திருத்துவதற்கு இலங்கை அரசாங்கங்கள் வாக்குறுதியளித்துள்ளன. இதனால் இது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் தரத்திற்கு மேலுள்ள பொலிஸ் அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளும் ஏற்பாட்டை இரத்து செய்வதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட பிரதான சீர்திருத்தங்களில் பிரதானமானதாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலங்களை பதிவு செய்தலானது பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதுடன் கொடூரமாக நடத்தும் கலாசாரத்திற்கும் வழிவகுத்தது என்பதே கடந்தகால அனுபவங்களிலிருந்து நாம் அறிந்துக் கொண்டதாகும்.
தற்போது, அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலங்களை இரத்து செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச சமூகத்திற்கு சுட்டிக்காட்டும்.
அதே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலம் என்ற பெயரில் தனியானதொரு சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இச்சட்டமூலத்தின் கீழ், பொலிஸ் உதவி கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு மேலதிக தரத்திலுள்ள அதிகாரிகளிடம் வழங்கப்படும் வாக்குமூலங்கள், பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.
இது தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் இரத்து செய்யப்படவுள்ள ஏற்பாடுகளுக்கு முற்றிலும் சமமானதாகும்.
இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்தின் கீழ், சந்தேகநபர்களுக்கு மேல் நீதிமன்றத்திலிருந்து மட்டுமே பிணை பெற முடியும்.
நீண்ட முடி மற்றும் பச்சை குத்தல்கள்
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லாதபோதிலும், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்ட காரணத்தினாலேயே அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான்களுக்கு நேரிடும்.

மேலும் இந்த சட்டத்திற்கமைய, ஒருவரது தலைமுடி அமைப்பு, பச்சை குத்தல்கள் அல்லது ஆடை அலங்காரத்தின் அடிப்படையில், குறித்த நபர் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றக் கும்பலொன்றின் உறுப்பினர் என்ற முடிவுக்கு வருவதற்கு நீதிமன்றத்திற்கு இடமளிக்கிறது.
அதற்கமைய, மிக விரைவில், பொலிஸாரால் பொருத்தமற்றது எனக் கருதப்படும் நீண்ட முடி மற்றும் பச்சை குத்தல்கள் இருப்பதன் காரணமாக பலர்கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்பாடு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தி வாக்குமூலங்களை பதிவு செய்வது, தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களை மேற்கொண்டு சித்திரவதைகள், கொடூரமாக நடத்துதல் மற்றும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தைத் தொடர்ந்து பேணிச் செல்லப்படும்.
மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் GSP+ சலுகையை உறுதிப்படுத்திக்கொள்ளவும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச சமூகத்தைச் வெற்றிகரமாக வழிகெடுக்க முடியுமா?” என அவர் பதிவிட்டுள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 2 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri