எரிபொருள் விநியோகத்தில் ஊழல்: வெளிவரும் தகவல்கள்
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோக செயற்பாடுகளில் ஊழல் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போதைய எரிபொருள் நெருக்கடியை பயன்படுத்தி வரையறுக்கப்பட்ட இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபன களஞ்சியம் (CPSTL) மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம்(CPC) ஆகியவற்றின் அதிகாரிகள் நாளாந்தம் பெரும் தொகை பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்வதில் காட்டும் முக்கியத்துவம் நாட்டுக்கு டொலரை ஈட்டித்தரும் பாரிய தொழிற்சாலைகளுக்கான விநியோகத்தில் காட்டப்படுவதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் போது வழங்கப்படும் மூன்று வீத தரகுப்பணம் தொழிற்சாலைகளுக்கான விநியோகத்தின் போது வழங்கப்படுவதில்லை. இருப்பினும் தொழிற்சாலைகளுக்கான விநியோகம் சீராக நடைபெறுவதில்லை.
டொலர்களில் எரிபொருள் கட்டணத்தை செலுத்தும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், அந்த பட்டியலில் பெயரை உள்ளடக்க 50 ஆயிரம் வரை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரும் விநியோக ஊழியர்களுக்கு பத்தாயிரம் தொடக்கம் பதினைந்தாயிரம் வரை கையூட்டு கொடுத்தால் மாத்திரமே விநியோகம் நடைபெறுகின்றது. இல்லையெனில் விநியோகத்தில் தாமதம் செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழல்
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நெருக்கடிக்கு முன்னர் ஒரு மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் எரிபொருள் பெற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது நாளொன்றுக்கு இரண்டு தடவை வீதம் விநியோகம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். கை நிறைய லஞ்சம் கொடுத்தே அவர்கள் அதனை பெற்றுக் கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் லஞ்சம் வழங்கப்படாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாட்கணக்கில் எரிபொருள் அனுப்பி வைக்கப்படுவதில்லை.
நாளாந்தம் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை பொறுத்தவரை பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்கும் தேவை இல்லை.
ஆனால் அதிகாரிகளின் லஞ்ச ஆசை காரணமாகவம் விநியோக நடவடிக்கைகளில் நிகழும் முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.