ஊழல் ஒழிப்பு சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (21.06.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,
இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த சபை அமர்வில் மேலும் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும்.
சட்டத்தை மதிக்கும் மற்றும் ஒழுக்கமான சமூகத்திற்கான துறைசார் கண்காணிப்புக் குழு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு, சட்டமூலத்தை விவாதிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவை என்பதால் விவாதத்திற்கு மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முன்னதாக உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, இந்தச் சட்டம் தொடர்பில் ஏற்கனவே பல திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன், அது குறித்து விவாதிக்க அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சாட்சிகளின் பாதுகாப்பு மசோதாவை ஊழல் தடுப்பு மசோதாவுடன் அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச, குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த சட்டத்தில் மற்ற சட்டம் தொடர்பான குறிப்புகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
43 திருத்தங்கள்
ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக 43 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
ஊழல் ஒழிப்புச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (21.06.2023) உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், திருட்டு தொடர்பான சட்டங்களை தளர்த்துவதற்காக அன்றி, மக்களின் எதிர்ப்பார்ப்புகளை மேலும் நிறைவேற்றி சட்டத்தை மேம்படுத்துவதற்காகவே இந்த திருத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டத்தில் 163 பிரிவுகள் உள்ளன, ஆனால் ஒரு பிரிவில் மட்டுமே திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




