பிரித்தானியாவில் ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று! தற்போதைய நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, இன்றைய தினம் 60,916 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் 830 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரித்தானியாவில் 2,774,479 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 76,305 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வரும் கொரோனா நோயாளிகளில் 1,847 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், டவுனிங் வீதியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரித்தானியாவில் தற்போது 1.3 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 29ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் நாளாந்தம் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வசந்த காலத்தில் தொற்றுநோயின் முதல் உச்சத்தில், நாளாந்தம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,000க்கு மேல் செல்லவில்லை.
தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு 50,000 க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் உறுதி செய்யப்பட்ட பின்னர், 60,000க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது ஆச்சரியமாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்தில் மீண்டும் பொது முடக்க கட்டுப்பாடுகள் தொடங்குவதால், பெரும்பாலான மக்கள் அனுமதிக்கப்பட்ட சில காரணங்களைத் தவிர வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பொது முடக்க கட்டுப்பாடுகள் பெப்ரவரி இரண்டாம் வாரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் "வரவிருக்கும் வாரங்கள் இன்னும் கடினமானவை" என பிரதமர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.
அத்தியாவசிய மருத்துவத் தேவைகள், உணவுப் பொருட்களை வாங்குவது, உடற்பயிற்சி போன்ற வீட்டில் இருந்தே செய்ய முடியாத, வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகளைத் தவிர்த்து, வீட்டுக்குள்ளேயே மக்கள் இருக்குமாறு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார்.
அத்துடன், பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் உடனடியாக பெரும்பான்மையான மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தலை தொடங்க வேண்டும் என்று அவர் வலிறுயுத்தியுள்ளார்.
இதனிடையே, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் பிரித்தானியா பிரான்சை பின்னுக்கு தள்ளி தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.