கிளிநொச்சி பொறியியல் பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி
யாழ். கொரோனா ஆய்வுகூடப் பரிசோதனையில் வவுனியாவைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் (வயது 24) ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் ஆய்வுக்கூடத்தில் இன்று 453 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது குறித்த மாணவனுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்குத் தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில்,
"வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 124 மாணவர்கள் கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் கல்வி நடவடிக்கைகளுக்காக வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இவ்வாறு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே அவர்களில் 24 வயதுடைய மாணவன் ஒருவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவன் வவுனியா, வேப்பங்குளத்தைச் சேர்ந்தவராவர்.
இதையடுத்து மற்றைய மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து 14 நாட்களுக்குக் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.