இலங்கை பொலிஸாருக்கு கோபா குழு பிறப்பித்துள்ள உத்தரவு
நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை சேகரித்து அப்புறப்படுத்துமாறு நாடாளுமன்ற பொது கணக்குகளுக்கான குழு (கோபா) பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் உயர் பொலிஸ் அதிகாரிகள், கோபா குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு உத்தரவு
மேலும், சர்வதேச மரபுகளின்படி பொதுக் கலவரங்கள் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோபாவுக்கு அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என குழுவின் தலைவர், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸ் திணைக்களத்தின் அடுத்த உத்தேச வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்குமாறு பொதுக் கணக்கு குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆராய்வதற்காக, பொதுக் கணக்குகளுக்கான குழுவின் முன்னிலையில், இலங்கை பொலிஸ் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சீர்திருத்த வேலைத்திட்டம்
இதன்போது பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை பொலிஸில் உள்ள பாரம்பரிய சூழல் மாற்றப்பட்டு எதிர்காலத்தில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தேவையான சீர்திருத்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் வருங்காலத்தில் பெண் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவதற்கான
சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் கோபா குழுவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.