மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 231வது படைப்பிரிவின் முயற்சியினால் தொடர்ச்சியாக உதவி
மட்டக்களப்பு 231வது இராணுவ படைப்பிரிவினரால் மூன்றாவது தடவையாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரண தொகுதியொன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணம் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று இலட்சம் பெறுமதியான ஒட்ஸிசன் செறிவாக்கி மற்றும் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரண தொகுதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கத்திடம் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள 231ஆவது இராணுவ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான பிறிகேடியர் கேணல் டிலூப பண்டார தலைமையில் கையளித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கல்லடி 231வது இராணுவ படையணியின் இராணுவ அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை காலாட் இராணுவ தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில் வாழ்கின்ற ஒன்றிணைந்த இலங்கை உறவுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



