ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகளுக்காக மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
ஏறாவூர் பொதுச்சந்தையின் நிர்மாண பணிகளுக்காக 35.50 மில்லியன் ரூபாய் ஏறாவூர் நகர சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைவாக கிழக்கு ஆளுநரின் விசேட ஏற்பாட்டின் மூலமாக அரசினால் செயற்படுத்தப்படும் சிறப்பு வேலைத்திட்டங்களில் ஒன்றான உள்ளக அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக உலக வங்கி, ஐரோப்பிய யூனியன் மற்றும் இலங்கை அரசு என்பவற்றின் விகித அளவிலான நிதிப் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் ஊடாக பகிரப்படும் நிதியில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் ஒரு அங்கமாக முன்னுரிமை அடிப்படையில் ஏறாவூர் பொதுச்சந்தையை துரிதமாக அபிவிருத்தி செய்து பொதுமக்களின் பாவனைக்கு வழங்கிட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க உடனடியாக அதற்கான ஏற்பாடுகளையும் சாத்திய வளங்களையும் ஆராயுமாறு அவர் அதிகாரிகளுக்கு வழங்கிய பணிப்புரையை அடுத்து ஆளுநரின் விசேட பரிந்துரையின் மூலமாக 35.50 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுச்சந்தை நிருமாண பணி
குறித்த நிதி பொதுச்சந்தை நிருமாண பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதன்பிரகாரம் மதிப்பீடு மற்றும் இலங்கை கட்டட தினைக்களத்தின் ஒப்புதல் பெறப்பட்டு குறித்த பணியினை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளும் கேள்வி பத்திரமும் கோரப்பட்டு நாளை அது நிறைவடைய உள்ளது.
சுமார் மூன்றரை கோடி ரூபாய் நிதியின் மூலம் ஏறாவூர் பொதுச்சந்தையின் எஞ்சிய வேலைகளை முன்னெடுத்து மக்களின் பாவனைக்கு வழங்குவதற்காக தனது முழுமையான பங்களிப்பினை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அளித்த உறுதிக்கு அமைவாக மிக விரைவாக குறித்த பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |