கனடாவில் தமிழ் சமூக நிலைய பணிகளுக்கு 26.3 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு
ஸ்காபரோவின் வடகிழக்கில் நிறுவப்படவுள்ள முதலாவது தமிழ் சமூக நிலையத்தின் கட்டுமானத்துக்கென ஒன்ராறியோ அரசாங்கமும், கனேடிய அரசாங்கமும் இணைந்து 26.3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளன.
இந்நிலையம் சமூக, கலாசார, பொழுதுபோக்கு போன்ற பல்நோக்கு அம்சங்களை உள்ளடக்கிய மாநில மற்றும் நடுவண் அரசுகளின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஒப்புதலுக்காக 1200 இற்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ அரசாங்கம் குறித்த நிலையத்துக்கான ஒப்புதலை வழங்கியுள்ளதுடன், ஒன்ராறியோ மாநிலத்தில் நிறுவப்படவுள்ள முதலாவது தமிழ் சமூக நிலையம் என்ற வகையில் இதற்காக 11.99 மில்லியன் டொலர்களை வழங்குவதில் ஒன்ராறியோ அரசாங்கம் பெருமை கொள்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஸ்காபரோ - றூஜ் பார்க்கிற்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பிரான விஜய் தணிகாசலம் கருத்து தெரிவிக்கையில்,
இங்கு அமையும் தமிழ் சமூக மையத்தினை கனடா வாழ் தமிழ் மக்களின் கனவாக மட்டுமன்றி அது அவர்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பிரதிபலனாகவுமே நான் பார்க்கிறேன்.
“ஸ்காபரோவில், தமிழ் சமூகத்தில் ஒரு இளையவனாக வளர்ந்து, இந்த சமூகத்துடனேயே தொடர்ந்து பயணித்த ஒருவன் என்ற முறையில், தமிழ் சமூக மையமானது இப்பகுதியில் வாழும் முதியோர்களுக்கும் இளையவர்களுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் நன்கறிவேன்.
தமிழ் சமூக நிலையத்தின் வளர்ச்சியையும், எதிர்வரும் ஆண்டுகளில் ஸ்காபரோவில் வசிப்பவர்கள் இதனூடாக அடையவுள்ள நன்மைகளையும் நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.