பிரதமருக்கு முன் முந்திக்கொண்ட ஜனாதிபதி:அரசியலமைப்பு மறுசீரமைப்பு யோசனை ஜனாதிபதிக்கு
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவு செய்யும் நோக்கில் அரசாங்கம் அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக அர்ப்பணிப்புடன் மதிப்பான பணியை நிறைவேற்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் காமினி செனரத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் யோசனைகள் அடங்கிய அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக பிரதமர் இதனை அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யும் முன்னர், ஜனாதிபதியும் பிரதமரும் நேரடியாக சந்தித்து பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் யோசனை தமக்கு கிடைத்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.