அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் உண்மையைத் தேடும் பொறிமுறைக்கு செல்ல வேண்டும்: அலி சப்ரி
மனித உரிமைகளுக்கான முழுமையான மற்றும் நீண்டகால தீர்வை இலங்கை எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் உண்மையைத் தேடும் பொறிமுறைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையை முன்மொழிந்த போதும், கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் அது நிராகரிக்கப்பட்டது.

புதிய அரசாங்கத்தின் கொள்கை
இந்த நிலையில் இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம், இடமளிக்காத நிலையில் வெளிப் பொறிமுறையில் உடன்பாடு இல்லை என்பதே ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் கொள்கையாகும்.
நாட்டில் வாழும் அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படையான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டுப் பொறிமுறைக்கு இலங்கை வாதிடும்.
நாங்கள் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறோம். எந்த மோதல்களிலும் எங்களுக்கு ஆர்வம் இல்லை.

நிரந்தர தீர்வு
அனைத்து முகவர் நிறுவனங்களுடனும் இருதரப்பு நாடுகளுடனும் சுமூகமான உறவுகளில் மட்டுமே நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
இந்த நாட்டின் நீண்டகால மோதலால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பினரின் பிரச்சினைகளுக்கு, முழுமையான தீர்வு அல்லது நிரந்தர தீர்வை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் சப்ரியும் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் நேற்று மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்பதற்காக ஜெனிவா பயணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.