அஸ்வெசும திட்டத்தில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் பரிசீலிப்பு தொடர்பான கருத்தமர்வு (Photos)
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிப்பதற்கான வழிகாட்டல் செயலமர்வு கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது
குறித்த செயலமர்வு, இன்று(02-08-2023) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையினால் தகுதியான நபர்களின் பெயர்பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மக்களால் தெரிவிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் முன்னாயத்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இலத்திரனியல் வலையமைப்பு
இதற்காக பிரதேச செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு இலத்திரனியல்
வலையமைப்பின் ஊடாகவே இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
கணனி மயப்படுத்தப்பட்ட முறையில் பின்பற்றப்பட வேண்டிய செயன்முறைகள் தொடர்பில் குறித்த உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இச் செயலமர்வு நடாத்தப்பட்டது.
இதன் வளவாளராக கிளிநொச்சி மாவட்ட செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் மு.நர்மதா கலந்து கொண்டு இலத்திரனியல் வலையமைப்பின் ஊடாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கங்களை வழங்கியுள்ளார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




