மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி நிகழ்வில் கருத்து மோதலால் உருவான குழப்பம்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் நேற்று(16) மாலை நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணியின் ஆரம்ப நிகழ்வின்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜுக்கும் தேசிய மக்கள் சக்தி களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமப்புறச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம்
இதன்கீழ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் கீழ் உள்ள களுவாஞ்சிகுடி விவசாய திட்ட வீதியின் புனரமைப்பு பணிகள் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் மே.வினோராஜ், பிரதேசசபையின் செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகரிகள், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வின்போது நிகழ்வினை அறிவிப்பு செய்த தேசிய மக்கள் சக்தி களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் அழைப்பு விடுக்காமல் வந்த தவிசாளரை வரவேற்பதாக தனது வரவேற்பு உரையில் தெரிவித்திருந்தார்.
இதன்போது குறுக்கிட்ட பிரதேசசபையின் தவிசாளர் இந்த வீதி எனது பிரதேசசபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த வீதியை அபிவிருத்தி செய்வது நான்தான் இதற்கு நீங்கள் என்னை அழைக்கத் தேவையில்லை என்றபோது இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும் அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் நிலைமையினை கட்டுக்குள் கொண்டுவந்ததை தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு கோடி 05இலட்சம் ரூபா செலவில் இந்த வீதியை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










