இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் விடுத்துள்ள கோரிக்கை!
தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரியதன் மூலம் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை அரசாங்கம் தமக்கு வழங்கவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களும் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.