ஞானசாரரிடம் சென்றது திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்ட விவகாரம்
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நீதிமன்ற வழக்கையும் பொருட்படுத்தாது புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் திருக்கேதீஸ்வர நுழைவு வீதியின் அருகாமையில் கிறிஸ்தவர்களால் கிறிஸ்தவ மத சொரூபம் நிறுவப்பட்ட விடயம் தொடர்பில் இன்று கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையிலான ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019இல் சிவராத்திரியை முன்னிட்டு இந்துக்களால் அமைக்கப்பட்ட வளைவு உடைத்து எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் அடுத்தடுத்து போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையிலும் மன்னார் மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் முன்னிலையில் மதத் தலைவர்கள் இணைந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் குறித்த வளைவு அமைக்கப்பட்ட இடத்தில் எந்தவித கட்டுமான நடவடிக்கைகளும் இருதரப்பும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்மானம் எட்டப்பட்டது.
எனினும் இதனை மீறி திடீரென அருகிலுள்ள தேவாலயத்தில் ஒரு பகுதியில் இரகசியமாக அமைக்கப்பட்ட மாதா சொரூபம் சடுதியாக முன் மதிற்சுவர்கள் உடைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை சட்டத்திற்கும் இரு தரப்புகளும் உடன்பட்டுக்கொண்ட ஒப்பந்தத்திற்கும் முரணானது என ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணியின் தலைவர் ஞானசார தேரர் உள்ளிட்டவர்களை சந்தித்த திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர் குறித்த முறைப்பாட்டை மேற்கொண்டதுடன் ஒரே நாடு ஒரே சட்டம் எனில் அனைத்து மதங்களுக்கும் ஒரே வகையான சட்ட அணுகுமுறை இருக்க வேண்டும், என்பதனையும் மன்னாரில் கிறிஸ்தவ மத பாதிரியார்களினால் திட்டமிட்டு தொடர்ந்தும் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை உருவாக்கும், மத சகிப்புத் தன்மைக்கு சவால் விடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மன்னார் மாவட்டத்தில் இந்துமத அடையாளங்களை சிதைப்பதும் இந்துமத சிலைகளை உடைப்பதும் சர்வசாதாரணமாக நடைபெறுகின்ற போதும் இதுவரை யார்மீதும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கிறிஸ்தவ சிலைகள் திரும்பும் திசையெல்லாம் புதிதாக அமைக்கப்படுவது தொடர்வதாகவும். மன்னாரில் இலங்கையின் அரசியல் யாப்பிற்கு புறம்பான விசித்திர சட்டங்கள் பாதிரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதும், நாட்டில் எங்குமில்லாதவாறு மதத்தின் அடிப்படையில் மாவட்ட அரச நிர்வாகிகள் நியமிக்கப்படுவதுமே அனைத்து முரண்பாடுகளுக்கும் பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னாரை பொறுத்தவரை முந்தைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதுடன் இந்துக்களை மாற்றான்தாய் மனப்பாங்குடன் நடத்துவதாக உணர்வதாகவும் வலியுறுத்தியுள்ளதுடன் இவ்வாறான செயற்பாடுகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கோரியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், குறித்த விடயத்தை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பொருத்தமான தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் உறுதி அளித்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் குறித்த சந்திப்பில் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் சிரேஸ்ர செயலாளர், திருக்கேதீஸ்வர நிர்வாகம் சார்பில் பிரதி கணக்காளர் நாயகம் கந்தசுவாமி இராமகிருஷ்ணன், திருமதி.கைலாசபிள்ளை, பிருந்தாவனம், நடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






